குலா: புதிய தமிழ், சீனமொழிப்பள்ளிகள் கட்டக் கூடாது என்ற துணை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும்


kulaபிரதமர்துறையில் இருக்கும் துணை அமைச்சர் ரஸாலி இப்ராகிம் சீனமொழி தொடக்கப்பள்ளிகள் இருப்பது நாட்டின் ஒற்றுமைக்கு பங்களிப்பு எதனையும் செய்யாததால் அரசாங்கம் இனிமேல் புதிய சீனமொழிப்பள்ளிகளைக் கட்டக் கூடாது என்று ஆகஸ்ட் 4 இல் கூறியுள்ளார்.
அவ்வாறே தமிழ்ப்பள்ளிகளும் தொடக்கப்பள்ளி நிலையில் இன ஒற்றுமையை வளர்க்கும் தேசிய திட்டத்திற்கு தடையாக இருக்கும் என்று அத்துணை அமைச்சர் கூறியுள்ளதாக டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
“இரு தினங்களுக்கு முன்பு அதிகமான சீனமொழி தொடக்கப்பள்ளிகள் கட்டுவதற்கு எதிரான அவரது கருத்தை அவர் மீண்டும் கூறியுள்ளார். தற்போது 453 சீனமொழி தொடக்கப்பள்ளிகள் மைக்குரோ பள்ளிகளாக, அதாவது குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள், இருக்கின்றன என்பதை அவர் தமது கருத்துக்கு ஆதரவாக சுட்டியுள்ளார்.
“தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருக்கின்றன என்ற ரஸாலியின் கருத்து முற்றிலும் அடிப்படையற்றது என்பதோடு பொறுப்பற்றதும் ஆகும்”, என்று குலா கூறுகிறார்.
“மொழி தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருக்கவில்லை. பிஎன் அரசாங்கம் அமல்படுத்திய நியாயமற்ற இனவாதக் கொள்கைகள்தான் தேசிய ஒற்றுமையை அடைவதற்கு தடையாக இருந்துள்ளது”, என்று குலா இடித்துரைத்தார்.
குறைந்த எண்ணிக்களைக் கொண்ட 455 சீனமொழி தொடக்கப்பள்ளிகள் இருப்பதால் கூடுதல் சீனமொழி தொடக்கப்பள்ளிகளைக் கட்டக் கூடாது என்ற ரஸாலியின் கருத்து நகைப்புகுரியது என்பதோடு ஏற்றுக்கொள்ள இயலாதது என்றாரவர்.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட 1317 தேசியப்பள்ளிகள்!

இவ்வாண்டு ஜனவரி 31 இல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரங்கள்படி நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:
அ) தேசிய தொடக்கப்பள்ளி – 1317
ஆ) சீன தொடக்கப்பள்ளி – 453
இ) தமிழ் தொடக்கப்பள்ளி – 298
இந்த அரசாங்க புள்ளிவிபரம் ரஸாலிக்கு தெரியாதா என்று குலா வினவினார்.
“ஆக, ரஸாலியின் விவாதத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்றால், எந்த புதிய பள்ளியும் – அவை தேசிய, சீன மற்றும் தமிழ் பள்ளியாக இருந்தாலும் – கட்ட முடியாது. என்ன மடத்தனம்!”
கூடுதல் சீனமொழி தொடக்கப்பள்ளிகள் கட்டக்கூடாது என்ற அவரின் உண்மையான உள்நோக்கத்தை மறைக்கும் நோக்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட சீனமொழிப்பள்ளிகளை பெரிதுபடுத்திய அவரது சூழ்ச்சி ரஸாலியின் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்தி விட்டது என்று குலா அவரது அறிக்கையில் கூறுகிறார்.
மக்கள் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றதால் நாட்டில் சில இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் இருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும், இதர பல இடங்களில் மக்கள் தொகை அதிகரிப்பால் சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் பற்றாக்குறை மிகக் கடுமையான இருக்கிறது என்று குலா சுட்டிக் காட்டுகிறார்.
மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்ற சீன மற்றும் இந்திய சமூகங்களின் வேண்டுகோள்களுக்கு பிஎன் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பொறுப்பான நடவடிக்கையும் முன்வரவில்லை என்று கூறிய குலா, ரஸாலியின் கூற்று கூடுதல் சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் பிஎன் அரசாங்கத்தால் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருவதால் சீற்றமடைந்துள்ளவர்களின் புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும் என்றார்.
ரஸாலியின் தீவிரவாத, நியாயமற்ற மற்றும் ஒரே மலேசியா கொள்கைக்கு எதிரான கருத்துகள் அவர் ஒரு துணை அமைச்சர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளது
“ஆகவே, நான் அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்”, என்றார் குலா.


Comments