பாலர்பள்ளிகள் குறித்து தாம் கேட்டிருந்த கேள்விகளுக்கு துணைக் கல்வி அமைச்சரான கமலநாதன் இது வரை மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் கூறுகிறார்.
“கல்வி அமைச்சின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர், தமிழர் என்ற முறையில் தமிழ் கல்வி வளர்ச்சிக்கு பொறுப்பாக இருக்க வேண்டியவர், தமிழ் பாலர்பள்ளிகள் இந்த நாட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்க வேண்டியவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியின் அடிப்படையில் நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர், 5 நாட்களுக்கு முன்பு தமிழ் நாளிதழ்கள் வாயிலாக நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் சொல்லாதது ஏன்?”, என்று குலா இன்று விடுத்துள்ள செய்தியில் கேட்கிறார்.
கமலநாதனின் “அநாகரிகமான செயல்”
கல்வி தொட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதுவும் தமிழ்க் கல்வி என்று வரும் பொழுது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட விரும்புவதாக கூறிய அவர், “நான் கேட்கும் நியாயமான, அறிவுப்பூர்வமான, மக்களுக்குஅவசியமான கேள்விகளுக்கு பதில் கூறாமல் என்னையும் மக்களையும் இருட்டில் வைத்திருக்க நினைக்கும் கமலநாதனுக்கு இது ஓர் அநாகரிகமான செயல் என்று தெரியவில்லையா?”, என்று அவர் வினாவுகிறார்
“இதே கேள்விகளை நான் எழுத்து பூர்வமாக நாடாளுமன்றத்தில் கேட்கும் பொழுது அவர் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். அப்பொழுது அவரால் எங்கு ஓடி ஓளிய முடியும்”, என்று கேள்வி எழுப்பிய குலசேகரன், அவரது கேள்விகளை மீண்டும் எழுப்புகிறார்.
குலசேகரனின் கேள்விகள்:
1. ஐ-சினார் திட்டமென்பது என்ன?
2. அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?
3. அவர்களுக்கும் தமிழ் பாலர்பள்ளிகளுக்கும் என்ன சம்பந்தம்?
4. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 மில்லியன் ரிங்கிட் எவ்வாறாக செலவிடப்பட்டுள்ளது?
5. பிரதமர் அறிவித்த தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 53 கோடி ரிங்கிட்டில் எவ்வளவு பணம் தமிழ்ப்பள்ளிகளில் பாலர் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது ?
6. 93 தமிழ் மற்றும் சீன பாலர் பள்ளிகள் நடப்பு ஆண்டில் கட்டப்படவிருப்பதாக வந்த அறிக்கையில் எத்தனை தமிழ் பாலர் பள்ளிகள் அடங்கியுள்ளன?
நாதனுக்கு சவால்
அரசாங்கம் வழங்கும் நிதி முறையாக அதன் இலக்கை சென்று அடைகின்றதா என்பதை உறுதி செய்யும் ஓர் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் கமலநாதன் என்று கூறுகிறார் குலா.
“அரசாங்கத்தையே குறைகூறி வரும் நாம் இப்பொழுது அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிதி தவறான வழியில் சென்று சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்களிடம் போய் சேர்ந்துள்ளது என்று தெரிய வரும் பொழுது பொதுமக்கள் கொதித்தெழுகிறார்கள். தமிழன் என்ற முறையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அதை தட்டிக் கேட்க வேண்டியது எனது கடமையாகும்”, என்றாரவர்.
“இதற்கு பதில் சொல்ல வேண்டியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளும் கட்சியில் இருந்தது கொண்டு கல்வி அமைச்சில் இரண்டாவது துணை அமைச்சராக வேறு பதவி வகிக்கும் கமலநாதன். இது அவரின் ஜனநாயகக் கடன். இதை அவர் செய்யத் தவறினால், ஒன்று அங்கு என்ன நடக்கின்றது என்று அவருக்கு தெரியவில்லை அல்லது அங்கு நடைபெறும் தில்லு முல்லுகளைப் பார்த்தும் அவற்றை சரி செய்ய அதிகாரமோ திராணியோ இல்லாதவர் என்றாகிவிடும்” என்று குலா சுட்டிக் காட்டுகிறார்.
“இது நான் கமலநாதனுக்கு விடும் சவால். கமலாநாதன் இச்சவாலை ஏற்று முறையான விளக்கத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும்”, என்றார் குலா.
Comments
Post a Comment