-மு. குலசேகரன், ஏப்ரல் 27, 2014.
கடந்த அக்டோபர் 2013 இல் தாக்கல் செய்யப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் நஜிப் பாலர் பள்ளிகள் அமைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில் தேசியமாதிரி சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 93 பாலர் பள்ளிகள் அமைப்பதற்கு கணிசமான தொகையையும், மலேசிய இந்தியர்களை தேசிய நீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்காக ரிம100 மில்லியனும், 176 பாலர் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டிற்காக ரிம28 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டின் நான்கு மாதங்கள் கடந்த பின்பும் இந்த ஒதுக்கீடுகளை பயன்படுதுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எந்தத் தமிழ்ப்பள்ளிகளுக்கு பாலர் பள்ளிகள் தேவை, எவ்வளவு ஒதுக்கீடுகள் இப்பள்ளிகளுக்கு கிடைக்கும், யார் இதைக் கட்டப்போகிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. பாலர் பள்ளிகளின் தேவை அதிகம் உள்ளது. அரசாங்கமும் அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த இரண்டையும் இணைத்து செயலில் இறங்க வேண்டியது யாருடைய பொறுப்பு? கல்வி அமைச்சுதான் இதனைச் செய்ய வேண்டும் என்பது அனைவற்கும் தெரியும். ஆனால், இதுவரை கல்வி அமைச்சு செயலில் இறங்கி விட்டதிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
கல்வி அமைச்சுக்கு உதவி தேவைப்பட்டால் தற்பொழுது பேராசிரியர் என்.எஸ் இராஜேந்திரனின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்ட வரைவுக் குழுவிடம் ஒப்படைக்கலாமே! பிரதமர்துறையின் கீழ் இயங்குவதாலும் தமிழ்ப்பள்ளிகள் அவரின் நேரடி பார்வையில் இருப்பதாலும், இப்பொறுப்பினை அந்தக் குழுவிடம் வழங்குவதன் வழி கல்வி அமைச்சின் சுமையும் குறையும் வேலையும் ஒழுங்காக நடைபெறுமே!!
நிதியை பள்ளி வாரியங்களிடம் கொடுப்பதே நல்லது
இப்பொழுதெல்லாம் பள்ளி வாரியங்களில் நிறையவே படித்தவர்களும் பொறுப்பானவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே, அரசாங்கம் நிதியை நேரடியாகவே பள்ளி வாரியங்களிடம் வழங்குவதன் வழி அரசாங்கத்தின் பணம் விரயமாகாமலும், காலம் தாழ்த்தப்பாடாமலும், அதன் நோக்கத்திற்கேற்ப செலவிடும் சாத்தியமும் அதிகமாக உள்ளது.
பள்ளி வாரியங்களில் உள்ளவர்கள் பள்ளியில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாலும் பள்ளியின் முன்னேற்றத்தில் மற்றவர்களைவிட அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பதாலும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் அதிக அக்கறையும் முனைப்பும் காட்டுவர் என்று நம்பலாம்.
கல்வி அமைச்சு வேண்டுமானால் அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு சரியான அதிகாரிகளைக் கொண்டு மேற்பார்வை இடலாம். தேவையானால், அவை முறையாக நடைபெற்றதா என்பதற்கு கணக்காய்வு செய்யலாம். மேலும், கடந்த பெப்ரவரி மாதம் தமிழ்ப்பள்ளிகளின் திட்ட வரைவு அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் கூறி இருந்தது போல, மானியங்கள் நேரடியாக பள்ளி வாரியத்திடம்கொடுப்பதே உத்தமமானது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நானும் இந்த பரிந்துரையை பெரிதும் வரவேற்கின்றேன்.
அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதிகள், குறிப்பாக பாலர் பள்ளிகளுக்கும், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கும் வழங்கப்பட்ட நிதிகள், பெரும்பாலும் ஒரு சில அரசு சாரா இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் அவை முறையாக சேர வேண்டிய இலக்கை அடையவில்லை என்பது பற்றியும் பத்திரிக்கைகளில் அதிகமாக எழுதப்படுவதை நான் கவனிக்கின்றேன்.
இது போன்ற சமுதாயச் துரோகச் செயல்கள் தொடர்வதை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. அதோடு அரசாங்கமும் இந்த விசயத்தில் இன்னும் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும். அரசு செய்யவேண்டிய கடமைகளை வெளியாட்களைக் கொண்டு செய்யச் சொல்வது பொறுப்பற்ற செயலாகும். பாலர்பள்ளி கட்டுவதற்கும் , கல்வி மேம்பாட்டுக்கும், தொழில் திறன் வளர்ச்சிக்கும் ஒதுக்கப்படும் நிதிகளை அரசாங்கம் அரசு சாரா அமைப்புகளிடம் வழங்கி விட்டதன் மூலம் அதனுடையக் கடமையைச் செய்துவிட்டதாக எண்ணி கை கழுவி விடக் கூடாது. பாலர் பள்ளி நிறுவது முதல் அது செயல்பட ஆரம்பிக்கும் வரை கண்காணிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
கணக்கு கேட்பேன்
அரசு சாரா அமைப்புகள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் மொழிக்கும் செய்யும் சேவை அரசாங்கம் செய்யும் முதன்மைப் பணிக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர அவையே அரசாங்கத்தின் வேலையை செய்யக் கூடாது என்று நான் கருதுகிறேன்.
அந்த வகையில் எத்தனையோ கோடி வெள்ளி கடந்த காலங்களில் ஊர் பேர் தெரியாத அரசு சாரா இயக்கங்களுக்கு கொடுக்கப்பட்டு அவை போன இடம் தெரியாமல் இருக்கிறது. இந்தத் தவறுக்கெல்லாம் அரசாங்கத்தின் அணுகுமுறையிலும் நிதி கொடுக்கும் முறையிலும் இருக்கும் கோளாறுதான் காரணம்.
இது குறித்து அடுத்த நாடாளுமன்றத் கூட்டதில், எந்த எந்த அரசு சாரா இயக்கங்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் யார் யாரென்று குறிப்பிட வேண்டுமென்று எழுத்து மூலமாக கேள்வி எழுப்ப உள்ளேன்.
56 கோடி வெள்ளி தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கபட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தப் பணம் எப்படி செலவழிக்கப்பட்டது என்பதற்கு முறையான விளக்கங்களை இதுவரை திருப்தி அளிக்கும் வகையில் எந்த தரப்புமே வெளியாக்கவில்லை. முன்னாள் அமைச்சர்களும் இன்னாள் அமைச்சர்களும் அந்தப் பணம் சரியாகத்தான் செலவு செய்யப்பட்டது என்று எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும், அந்தப் பெருந்தொகையின் தாக்கத்தை எந்த வகையிலும் நம்மால் பார்க்க முடியவில்லை.
இந்த 56 கோடிக்கான விரிவான செலவுப் பட்டியலை, எந்தப் பள்ளிக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, என்ன மாதிரியான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன, அவை பூர்த்தியாகி விட்டனவா என்பன போன்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் விளக்கம் கொடுக்க வேண்டும்.
Comments
Post a Comment