மதமாற்றம் ஒரு நீண்ட காலப் பிரச்சனை. அதில் சம்பந்தப்பட்டவர்கள் மன உளைச்சளையும், நிம்மதியின்மையயும் அனுபவிக்கின்றனர்.
இதனால் தொடரும் துயரங்கள் குறித்தும் அதன் வழி வரும் இன்னல்கள் குறித்தும் 2009 ஆம் ஆண்டிலேயே நான் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளேன். அதன் விளைவாக அமைந்ததுதான் உயர்மட்ட அமைச்சரைக்குழு. குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறினால், குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் மதம் மாறுவதற்கு முன்னால் பின்பற்றப்பட்ட அதே மதத்தில் வளர்க்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அப்போதைய சட்ட அமைச்சரால் கூறப்பட்டது.
சுருங்கக் கூறின், இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் அவர் இஸ்லாம் அல்லாத அவரின் முதல் மனைவியின் வழி பெற்ற குழந்தைகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றக்கூடாது.
இந்த அமைச்சரவையின் முடிவானது பின்னர் அதற்குண்டான திருத்தங்கள் செய்யப்பட்டு அமுலுக்கு வரும் என்று அப்போதே அரசாங்கத்தால் உறுதி கூறப்பட்டது.
ஆனால், இன்று வரை , அந்த சட்ட திருத்தம் செய்யப்படவே இல்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவே இல்லை. இது பாரிசான் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கையும் அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களின் உணர்வையும் மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
அன்றே அது சட்டமாக்கப்பட்டிருந்தால் இன்று தீபாபா போன்றோர்க்கு ஏற்பட்ட சங்கடத்தையும் துன்பத்தையும் தவிர்த்திருக்கலாம்.
மலேசிய இந்தியர்களை பிரதிநிதித்து அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஜி. பழனிவேலும், டாக்டர் எஸ். சுப்ரமணியமும் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள் ? மீண்டும் அமைச்சரவையில் இந்த பிரச்சனையை எழுப்புவார்களா ?
அதிகமான இந்தியர்கள் இப்பிரச்சனையில்பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் இந்தியர்களை வழி நடத்தும் கட்சி என்று கூறிக் கொள்ளும் ம.இ.கா அதன் பங்கை ஆற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. பிரதமர் நஜிப்பிடம் இப்பிரச்சனையை அமைச்சரவையின் பார்வைக்கு உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என இவ்விரு அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டில் கொடுத்த வாக்குறுதியை சட்டத் திருத்தத்தின் வழி நடைமுறைக்கு கொண்டு வருவது எப்போதையும் விட இப்போது மிகவும் அவசியமாகிறது.
உலகத்தில் வேறு எங்கும் இல்லாமல் இந்த நாட்டில் மட்டுமே மக்கள் இரு வகையான சட்டத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றார்கள். அதுவும் இஸ்லாமியர் அல்லாதவர்களை இந்த இருவகைச் சட்டங்கள் மூன்றாம் தர குடிமக்களை போலவே நடத்துகின்றது. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை இஸ்லாம் அல்லதவர்களின் பதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கமறுக்கிறது. தீபாவுக்கு அவரது மகனை பாதுகாக்கும் பொறுப்பை சட்டப்படி உயர்நீதிமன்றம் வழங்கியும், அவரின் முன்னாள் கணவன் அக்குழந்தையை தாயின் கண்ணெதிரிலேயே அபகரித்து சென்றிருக்கின்றான். இந்த சட்டத்திற்கு புறம்பான செயல் குறித்து போலீசாரிடம் புகார் செய்தும் அவரின் உதவிக்கு போலீசார் வர மறுக்கின்றனர். இதற்கு போலீஸ் தலைமை அதிகாரியே தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார். ஐஜிபியின் இந்தப் போக்கு நாட்டின் சிவில் சட்டத்தை கேலிக் கூத்தாக்குகிறது.
சிவில் சட்டத்தின் கீழ் பணிபுரியும் நாட்டின் முதல் நிலை போலீஸ் அதிகாரியான ஐஜிபியே சிவில் சட்டத்தை மதிக்காதபோது, சாதாரண மக்கள் எப்படி அதனை மதிப்பார்கள் ?
200 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட நாடும் 90 விழுக்காடு இஸ்லாமியர்கள் வாழும் நாடாகிய இந்தோனேசியாவில் இது போன்ற மத மாற்றங்களால் எந்த ஒரு பிரச்சனையும் வராத போது 30 மில்லியனுக்கும் குறைவான, 60 விழுக்காட்டு இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியாவில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? மக்கள் அவரவர் விருப்பப்படி மதங்களை தேர்வு செய்து வாழ்வதற்கு ஏன் இந்த அரசாங்கம் குறுக்கே நிற்கிறது ? இந்தோனேசியாவில் ஒரே குடும்பத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர், இந்துக்கள் என எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக வாழும் போது மலேசியாவில் மட்டும் ஏன்முடியவில்லை?
மலேசியா, இந்தோனேசியாவிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு வேளை, மலேசியக் குழு ஒன்று இந்தோனேசியாவிற்கு சென்று எப்படி அங்குள்ள மக்கள் மத இணக்கத்தோடு வாழ்கிறார்கள் என்று கற்றுவருவது நலம் பயக்கும் என்று நான் கருதுகிறேன்.
ம.இ.கா அமைச்சர்கள் அவர்களின் சமூகக் கடப்பாட்டை, இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவதன் வழி வெளிக்கொணர வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன்.
Comments
Post a Comment