-மு. குலசேகரன், ஏப்ரல் 3, 2014.
இந்தப் பதில் முன்பு சாமிவேலு கூறாத புதிய ஒன்று என்று நான் கருதுகிறேன். கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறவேண்டுமே என்று நினைத்து சாமிவேலு உளறியிருப்பதாகவே எனக்கு படுகிறது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் பங்குதாரர்களும், பத்திரிகையாளர்களும் ஏன், நான்கூட இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளேன். அப்பொழுதெல்லாம் மஇகா ஹோல்டிங்ஸ் தோல்வியானதற்கு அரசாங்கத்தின் ஒத்துழையாமைதான் காரணம் என்று அவர் கூறியதே இல்லை. இப்பொழுது இந்தப் புதிய சால்ஜாப்பு எங்கிருந்து வந்தது? இதனை சாமிவேலுவால் நிருபிக்க முடியுமா?
இது அரசாங்கதின் மீது போடும் பழியாகாதா? இதனைக் கேட்டுக்கொண்டு பாரிசான் அரசு சும்மா இருக்கக் கூடாது. உண்மையென்றால் சாமிவேலு அதற்கான ஆதரங்களை வழங்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கம் சாமிவேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஇகா ஹோல்டிங்ஸ்சின் தோல்விக்கு இதுதான் காரணமா ?
ஏழைகளின் பணத்தை வசூல் செய்து, “ இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன்” என்றெல்லாம் வாக்குக் கொடுத்து, 25 வருடங்களுக்குப் பிறகு முதலுக்கு “பங்கம்” ஏற்படா வன்ணம் அப்படியே முழுமையாகக் கொடுக்க சாமிவேலுவைத் தவிற வேறு யாரால் முடியும்? மஇகா ஹோல்டிங்ஸ்சின் ஊழலை விசாரிக்க ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் 1992 இல் நாடளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பியபோது அவரை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது . அது அவருக்கு கொடுக்கப்பட்ட “பரிசு” என்பது மலேசிய இந்தியர்களுக்கு தெரியும். அப்பொழுதே அந்த விசாரணையைச் செய்ய அனுமதி அளித்திருந்தால் உண்மை அப்பொழுதே வெளிப்பட்டிருக்கும்.
சாமிவேலு மஇகா ஹோல்டிங்ஸ் தோல்விக்கு மட்டும் காரணமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களின் இன்றையத் தாழ்வு நிலைக்கும் அவரே காரணம்!
1997 ல் தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமான நிபோங் திபாலில் இருந்த 10 ஏக்கர் நிலத்தைஅம்னோவிற்கு தாரை வார்த்ததுவும் சாமிவேலுதான். அப்பொழுதே நான் நாடாளுமன்றத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தேன்.
இந்திய மாணவர்கள் எண்ணிக்கை உயர் கல்விக்கூடங்களில் தேய்பிறைபோல் குறைய ஆரம்பித்ததும் இந்த மகான் காலத்தில்தான்.
அவர் காலத்தில்தான் குண்டர் கும்பல் ம.இ.காவில் தலையெடுக்க ஆரம்பித்தது. அதற்கு சாட்சிதான் குண்டர்களால் நானும் சுப்ராவும், மஇகாஹோல்டிங்ஸ் கூட்டத்தில் கேள்வியெழுப்பிய போது வாங்கிய அடிகள்.
சாமிவேலு மற்றும் மகாதீர் காலத்தில்தான் இந்தியர்களின் வீழ்ச்சிக்கு வித்திடப்பட்டது.காவல்துறை, பாதுகாப்புதுறை , சுகாதாரத்துறை, பொதுப்ணித்துறை இப்படி எல்லா துறைகளிலும் இந்தியர்கள் என்ணிக்கை மகாதீரால் திட்டமிட்டு குறைக்கப்பட்ட போது அவருக்கு ஒத்து ஊதிக்கொண்டு ஜால்ரா போட்டது இந்த சாமிவேலுதான்.
இந்தியர்களுக்காக உருப்படியான எந்த ஒரு திட்டத்தையும் சாமிவேலு முன்னெடுக்கவில்லை. அவர் தனக்கும் தன்சகாக்களுக்குமே சொத்து சேர்ப்பதில் முனைந்தாரே தவிற இந்தியர்களுக்கென்று அவரிடம் ஒரு திடமான முன்னோடி திட்டம் இல்லை.
மஇகா ஹோல்டின்ஸ்கூட இந்தியர்களுக்காக அவர் போட்ட வளர்ச்சித் திட்டம் என்று சொல்லப்பட்டாலும் அதன் முடி எதிர்மறையாக போனதற்கு அவர்தான் காரணம். சரியானபொருளாதார அறிவும், அனுபவமும், பணத்தை நிர்வகிக்கக்கூடிய திறமையான ஆட்களை நியமிக்காத காராணத்தினால்அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. ஊதுபத்தி கம்பெனியிலும், விசிடி கம்பெனியிலும் பணத்தைப் போட்டால் வேறு என்ன கிடைக்கும் ?
1980 -90 களில் நாட்டிலுள்ள தோட்டப்புறங்கள் அரசாங்கத்தால் மேம்பாடு என்ற பெயரால் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்தியர்கள் ஆதரவற்றவர்களாக விடப்பட்டபோது அதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருந்தவரும் இந்தத் தானைத் தலைவர் சாமிவேலுதான். இதற்கு புத்ரா ஜெயா உருவாக்கத்தின் போது வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் டெங்கில் என்ற இடத்தில் முறையான வீடு கொடுக்கப்படதாதால் கூடாரம் அடித்து வாழ்ந்து வந்ததை நல்ல உதராணமாகக் கொள்ளலாம். சிங்கம் போல் கர்ஜித்த குரலில் மஇகாவினரையும் சாதாரண ஏழை இந்தியனையும் அடக்கி ஆண்ட சாமிவேலு மாகதீரின் முன்னால் பூனையாகி வாயை மூடிக்கொண்டு ஆமாம் சாமி போட்டர். அவர் நினைத்திருந்தால் அந்த தோட்ட தொழிளாளர்களுக்கு பெல்டா போன்று ஒரு திட்டத்தை ஏற்படுத்த அரசாங்கத்தை வலியுருத்தியிருக்க முடியும். அதற்கான நியாயமான காரணங்களும் அப்பொழுது இந்தன. ஆண்டாண்டு காலமாக இந்த நாட்டின் வளப்பத்திற்காக தியாகம் செய்த இந்தியர்களுக்காக இப்படி கேட்பது ஒன்றும் அதிகமில்லை.
வாய்ப்பும் பதவியும் அதிகாரமும் கையில் இருந்த காலத்தில் அதனை சரியாக பயன்படுத்த பயந்து அம்னோவுக்கும் மகாதீருக்கும் அடிமை போல் சேவை செய்ததால்தான் இந்தியர்களின் உரிமையை தட்டிக் கேட்க இயலாமல் போய்விட்டது.
தன் சுயலாபத்திற்காகவே மஇகாவை பயன் படுத்திக் கொண்ட சாமிவேலு, அவரின் இலட்சியத் தோன்றலான மஇகா ஹோல்டிங்ஸ்ஸின் தோல்விக்கு அரசாங்கத்தை குறை கூறுவது உண்மைக்கு புறம்பானது. வசூலித்த 10 கோடி வெள்ளியை அரசாங்கமா எடுத்துக்கொண்டது? அரசாங்கமா பணத்தை இப்படிதான் முதலீடு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது?
“நமக்கென்று சேர்த்துக்கொள்ளும் ஆசை வந்துவிட்டால் பிறருக்கென்று எதுவும் செய்யமுடியாமல் போய்விடும்.” இது எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பேசிய வசனம். இந்த வசனம் சாமிவேலுவை பொறுத்த மட்டில் மிகவும் உண்மை.
Comments
Post a Comment