உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி வான் ஜாபார், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்து ஒட்டுமொத்த மலேசியர்களையே முட்டாள்களாக்கி அவர் மிகவும் புத்திசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்.
நாடாளுமன்றத்தின் உள்ளே இது போன்று வான் ஜுனைடி பேசியிருந்தால் அதற்கு உடனடியாக என்னால் பதிலடி கொடுத்திருக்க முடியும். நாடாளுமன்ற வாளாகத்தில் இது நடந்ததால் பத்திரிகை வாயிலாகத்தான் இதற்கு என்னால் பதில் அளிக்க முடிகிறது.
கேள்வி : ஏன் மலாய்க்காரர்களிடையே பாலியல் வல்லுறவு அதிகமாக இருக்கிறது ?
வான் ஜுனைடியின் பதில்: மாலாய்க்காரர் அல்லாதவர்கள் பாலியல் வல்லுறவு குறித்து போலீசில் அதிகமாகப் புகார் கொடுப்பதில்லை. அதனால்தான் புள்ளிவிவரங்கள் அதிகமான மலாய்க்காரர்கள் இக்குற்றத்தை புரிகின்றனர் என்று காட்டுகிறது.
வல்லுறவு என்பது மதம், இனம், மொழி பார்த்து வருவதில்லை என்பது துணை அமைச்சருக்கு தெரியவில்லை போலும். எல்லா இனங்களிலும் இது காணப்படுகின்றது. இது போன்ற அராஜகங்களைப் புரிகின்றவர்கள் எல்லா காலங்களிலும் எல்ல இனங்களிலும் இருந்துள்ளார்கள் என்பதுதான் உலகமறிந்த உண்மை.
உள்ளே சரக்கு இல்லாத காரணத்தால் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல தெரியாமலும், இயலாமலும் மற்ற இனங்களை வீணே வம்புக்கு இழுத்து பேசியிருக்கின்றார் இந்த ஜுனைடி.
மாலாய்க்காரார்கள் அதிகமாக இக்குற்றத்தைப் புரிகிறார்கள் என்பது ஆய்வின் அறிக்கை. அதை ஏற்றுக்கொண்டு, அதைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது அரசாங்கம் என்பதைத்தான் பொதுவாக பதிலாக எதிர்ப்பார்ப்பார்கள்.
எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல் மாலாய்க்காரர் அல்லாதவர்கள் பாலியல் வல்லுறவு குறித்து புகார் செய்வதில்லை என்பதற்கான காரணம் அவர்கள் இதைச் சாதாரணமாக கருதுகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு முக்கியப் பிரச்சனை அல்ல என்று கூறியிருக்கின்றார்.
முறைக்கேடாக பிறந்த குழந்தைகள், பாலியல் வல்லுறவு ஆகியவற்றை இஸ்லாம் ஏற்கவில்லை என்பதனால் அதிகமான மலாய்க்காரர்கள் போலீசில் இக்குற்றங்கள் குறித்து புகார் செய்கின்றார்கள் என்று அவர் மேலும் கூறியிருக்கின்றார்.
எல்லா மதங்களுமே (இஸ்லாம் உட்பட) பாலியல் வல்லுறவு, குழந்தைகள் முறைகேடாக பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி இருக்கும் பொழுது துணைஅமைச்சர் பேசிய பேச்சிலிருந்து இஸ்லாம் மதம் மட்டுமே இவற்றை எதிர்க்கின்றது; மற்ற மதங்களுக்கு இது ஏற்புடையது என்பது போல இருக்கின்றது.
இது அவரின் பொதுஅறிவின் ஆழத்தையும், மற்ற மதங்களில் உள்ள நெறிகளை அவர் எந்த அளவிற்கு அறிந்து பாண்டித்தியம் பெற்றிருக்கிறார் என்பதையும் நன்கு வெளிப்படுத்துகிறது. அவரின் பொறுப்பற்ற பேச்சு, நாடளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எல்லா இனங்களின்உணர்வுகளையும் அறிந்திருக்க வேண்டியவரே இது போல பேசியிருப்பது சக நாடாளுமன்ற உறுப்பினர் என்றமுறையில் நான் வெட்கமும் வேதனையும் அடைகின்றேன்.
இது போன்ற அமைச்சர்கள் பதிவியிலிருப்பதே ஒரு சாபக்கேடு. மூவினங்கள் வாழும் ஒரு நாட்டில் தன் சொந்த இனம் மட்டுமே ஒழுக்க சீலர்களை கொண்டுள்ளது, மற்ற இனங்கள் வாழ்வு நெறி, பண்பாடு, மதம் இல்லாத மந்தைகள் என்று எண்ணும் இவர் போன்ற மண்டூகங்கள், அம்னோ அரசியல் வாதிகள், நாட்டில் இருப்பதால்தான் நாடு இந்த அளவுக்கு, முன்பு எப்பொழுதுமே இல்லதா அளவுக்கு, ஒற்றுமையின்றி இருக்கின்றது.
புள்ளி விவரங்கள் அடிப்படையில், சரியாக மூளையைப் பயன் படுத்தாமல் வாயில் வந்ததை ஆராயாமல் உளறியிருக்கும் இந்தத் துணை அமைச்சர் எந்தவிதமான பின்னணியில் இருந்து வந்திருப்பார் என்று இப்பொழுது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. சரவாக் தேசிய முன்னணியைச் சார்ந்தவரான இந்தத் துணை அமைச்சர் ஏற்கனவே , சரவாக் மலேசியவுடன் இணைந்த 1963ஆம் ஆண்டு உடன்பாட்டில் உள்ள சில அம்சங்களை வெளிப்படையாக விவாதிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தவர் என்பதை நினைவு கொள்வது நல்லது. அரசியலையும் இனத்தையும் கேடயமாக பயன்படுத்தி மற்ற இனங்களை நிந்தித்து கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத இது போன்ற மூன்றாம் தர நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவரை உடனடியாக பதவி நீக்கம் செய்து இருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையும் அம்னோ காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மற்ற பாரிசன் உறுப்புக் கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும். தெரிவிப்பார்களா?
Comments
Post a Comment