தாய்மொழிப்பள்ளிகள் இந்நாட்டில் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும். அதன் அடிப்படையில், நமது தாய்மொழிப்பள்ளிகளான தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அனைத்து வசதிகளையும் உதவிகளையும் எந்த ஒரு பாரபட்சமின்றி அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும். மேலும், அதனை அமைச்சரவையில் உள்ள இந்திய அமைச்சர் தட்டிக்கேட்க வேண்டும் என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கூறினார்.இந்தியர்களின் பிரச்னையைச் சிறப்பு குழு கவனிக்கும் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று இப்பொழுதான் மஇகா சேவைசெய்ய முயல்வது வேடிக்கையாக உள்ளது.
இத்தனைக் காலமாக இந்தியர்களுக்கு பிரச்னையை உருவாக்கியது யார் என்பதனை முதலில் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாரவர்.
ஏன் 30 தமிழ்ப்பள்ளிகள் மட்டும்?
இந்தியர்களின் முதன்மையான பிரச்னை தமிழ்ப்பள்ளிகள்தான் என்பதனை மறந்துவிடக்கூடாது என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சிறப்புக் குழு பத்தாவது மலேசியா திட்டத்தில் 30 பள்ளிகள் 7 கோடி ரிங்கிட்டில் தரம் உயர்த்தப்படும் என்ற தகவலை மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளது மிகவும் கேளிக்கையானதாக இருக்கிறது என்றாரவர்.
“எந்த அடிப்படையில் இந்த 7 கோடி வெள்ளி வழங்கப்பட்டது? நீங்கள் முழு அமைச்சர் என்ற முறையில் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்த தொகை எவ்வளவு? நீங்கள் பரிந்துரை செய்யும் முன் முழுமையான ஆய்வு மேற்கொண்டீர்களா? அதன் விவரங்கள் என்ன? அதனை மக்களிடம் ஏன் தெரிவிக்கவில்லை? எத்தனைத் தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் அடிப்படை வசதி இன்றி இருக்கிறன என்பதனை மக்களுக்கு விளக்க முடியுமா? எந்த ஆய்வின் மூலம் 30 தமிழ்ப்பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள்? தேர்தெடுத்த இந்தப் பள்ளிகளில் இதர மொழி பள்ளிகளை காட்டிலும் என்னென்ன வசதிகள் இல்லை என்று ஒப்பிட்டு பார்த்தீர்களா?”, என்று கேள்விகளை அடிக்கினார் குலசேகரன்.
“முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் எதற்காக அவரச அவசரமாக அரசாங்கம் வழங்கிய சின்னஞ்சிறிய ஒதுக்கீட்டை பெரிய அளவில் தம்பட்டம் அடிக்கிறீர்கள்?”, என்று அவர் வினவினார்.
பொதுநலத்திற்கு இடமில்லையா?
“மஇகாவின் அமைச்சர்கள் சிறுபான்மையாக இருக்கும் வேளையில், மக்கள் கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்திருக்கலாமே? ஏன் அதனை செய்யவில்லை? ஏன் கட்சியின் தன்னலம் கருதி முடிவு செய்கிறீர்கள்? பொது நல கொள்கை எப்பொழுது மலரும் உங்கள் எண்ணத்தில்?
“கல்வி என்பது நமது சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் வசதிகள் மறுக்கப்படுகின்றன” என்பதை வலியுறுத்திய அவர், இதனால் இதர மொழி பள்ளிகள் வசதியில் உயர்வாகவே இருக்கும் காரணத்தினால் நமது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பிறகு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அவற்றை மூடிவிட அரசாங்கம் முயலும்போது தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது.
“இந்நாட்டில் தற்சமயம் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காணும் வகையில் இருக்கக்கூடிய 523 பள்ளிகளை முழுமையான வசதியுள்ள தமிழ்பள்ளிகளாக மாற்ற அரசாங்கம் என்னென்னத் திட்டங்களை கொண்டிருக்கிறது என்று பட்டியலிட முடியுமா?
“மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஆனால் பள்ளிகளின் எண்ணிக்கை கூடவே இல்லை. தமிழ்ப்பள்ளிகளின் வசதிகளுக்கு முழுமையான தீர்வே கிடைக்காத பட்சத்தில், எதற்காக இந்த ஒதுக்கீடு என்று சிந்தித்து பார்த்தீர்களா? கிள்ளி வழங்கியதை அள்ளி வழங்கியதுபோல் பேசுவதுதான் அமைச்சருக்கு அழகா?”, என்று குலசேகரன் மேலும் வினவினார்.
பத்தாவது மலேசியா திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு என்று ஒதுக்கியது இவ்வளவுதானா? இதற்கு முன்பு அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்க வாக்குறுதி அளித்த ஒதுக்கீடுகள் என்னவாயிற்று என்று அவர் மேலும் கேட்டார்.
“ஆயர் தாவார் கொலம்பியா தோட்ட தமிழ்ப்பள்ளியின் நிலையை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால், இதுநாள் வரையில் அந்தத் தமிழ்ப்பள்ளியின் அவல நிலை குறித்து எந்த ஒரு நல்ல முடிவும் பிறக்கவில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த 30 தமிழ்ப்பள்ளிகளில் இந்தக் கொலம்பியா தோட்ட பள்ளி அடங்கியுள்ளதா இல்லையா? இல்லையென்றால் விளக்கம் சொல்ல வேண்டும்” என்று குலசேகரன் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய முன்னணியின் வழக்கமான, பழைமை வாய்ந்த சூழ்ச்சிகளில் மேலும் தமிழ் பள்ளிகள் பலியாவதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். இனியும் தமிழ் பள்ளிகளின் எதிர்காலத்தை கட்சியின் சுயலாபத்திற்கு அடகுவைக்காதீர்கள் என்றாரவர்.
Comments
Post a Comment